Monday, 25 August 2014

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !





 புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.

பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.

பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !

புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.

உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !

PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.

Tuesday, 5 August 2014

ஆன்ட்டிபயாடிக் என்பவை என்ன? அவற்றின் வேலை என்ன? அவற்றை சரியாக எடுத்துக் கொள்ளும் முறை என்ன?



ஆன்ட்டிபயாடிக் விஷயத்தில் அறியாமை வேண்டாம்!

 



கடந்த சில வருடங்களில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியானது வெகுவாகக் குறைந்து வருகிறது. காரணம், நோய்க்கான உண்மையான காரணம்  தெரியாமல் மக்கள் தாமாக செய்து கொள்கிற சுய மருத்துவம். குறிப்பாக ஆன்ட்டிபயாடிக் உபயோகிப்பதில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற  மக்களின் அறியாமை.

உலக அளவில் மருத்துவர்களாலும் நோயாளிகளாலும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் 50 சதவிகிதம் தவறாக உபயோகப்படுத்தப்படுகின்றன. 53 சதவிகித  மக்கள் தாமாகவே ஆன்ட்டிபயாடிக் வாங்கி சாப்பிடுகிறார்கள். அவர்களில் 4ல் ஒருவர் அதை முழுமையாக எடுத்து முடிப்பதில்லை. 70 சதவிகித  மருத்துவர்கள் ஜலதோஷம் போன்ற மிகச் சாதாரண பிரச்னைகளுக்குக் கூட அனாவசியமாக ஆன்ட்டிபயாடிக்கை பரிந்துரைக்கிறார்கள்.

50 சதவிகித மருந்துக் கடைக்காரர்கள் மருத்துவர்களின் சீட்டு இன்றி, ஆன்ட்டிபயாடிக் விற்கிறார்கள். இன்னும் இப்படி ஏகப்பட்ட புள்ளிவிவரங்களை  அடுக்குகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஒன்று. தேவையற்ற நேரத்தில், தேவையற்ற விஷயங்களுக்காக எடுத்துக் கொள்ளப்படுகிற  ஆன்ட்டிபயாடிக், நோய்க்குக் காரணமான கிருமி களை எதிர்த்துப் போராடுவதற்கு பதில், அந்தக் கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, அவற்றை  மேலும் பலசாலிகளாக மாற்றிவிடும். பலவகை ஆன்ட்டிபயாடிக் மருந்துகள் வீரியமிழந்து வருவதற்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போகவும்  இதுவே முக்கிய காரணம். ஆன்ட்டிபயாடிக் எடுத்துக் கொள்வதில், படித்த, படிக்காத எல்லா மக்களுக்கும் தெளிவோ, விழிப்புணர்வோ இல்லை என்பதே  உண்மை.