Monday, 8 September 2014

உணவின் அவசியம்!



உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலை:


காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும். பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைப்படலாம்.

சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுப்படுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

மதியம்:


மதிய உணவு சரியாக 12.30 மணியில் இருந்து 1.30 மணிக்குள்ளாக சாப்பிடுவது அவசியம். நமக்கு பெரும்பாலான வியாதிகள் வரக்காரணமே காலம் தவறி சாப்பிடுவது மற்றும் கண்டதையும் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக்கொள்வதால் தான். எனவே சாப்பாட்டு நேரத்தை ஒழுங்காக கடைப்பிடித்தால் சில வியாதிகளை கட்டுப்படுத்த முடியும்.
காலை உணவுக்குப் பின் சிலர் நொறுக்குத் தீனி, டீ, ஜூஸ் என்று கண்டதையும் சாப்பிடுகிறார்கள். இது மதிய உணவை தள்ளிப் போடச் செய்யும். மதிய உணவும் உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. ஏனெனில் நாம் பகல் முழுவதும் உழைப்பதால் உடலுக்கு சக்தி தேவை. அதற்கு மதிய உணவுதான் சரியானது. எனவே எக்காரணத்தைக் கொண்டும் மதிய உணவை தவற விடாதீர்கள்.

மதிய உணவுக்குப் பிறகு சிறிது பழ ஜூஸ் குடிக்கலாம். எலுமிச்சை, ஆப்பிள், திராட்சை ஜூஸ் போன்றவை நல்லது. மதிய உணவு தரமானதாக இருக்க வேண்டும். முழு வயிற்றுக்கும் சாப்பிட வேண்டும். தரமற்ற உணவுகள் செரிமானம் ஆகாமல் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது.

இரவு:


இரவு உணவு நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். பெற்றோருடன் ஒன்றாக அமர்ந்து இரவு உணவை சாப்பிடுவது சிறந்த பலன்களை தருவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. மாதத்தில் அதிக நாட்கள் பெற்றோருடன் அமர்ந்து சாப்பிட்ட பருமனான குழந்தைகளின் எடை 15 சதவீதம் குறைந்திருந்தது. இதற்கு பெற்றோரின் கண்டிப்பும், கண்காணிப்பும் ஒரு காரணம்.
மற்றொரு ஆய்வு, "பெற்றோருடன் ஒன்றாக இரவு சாப்பாடு சாப்பிடும் பழக்கமுள்ள டீன்ஏஜ் குழந்தைகள் மது, போதை போன்ற தவறான பழக்கத்தின் பக்கம் செல்வதில்லை" என்று கூறுகிறது. உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வழக்கத்தைவிட ஒரு மணி நேரம் முன்பாக இரவு உணவைச் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
இரவு பெரும்பாலும் ஓய்வுதான் என்பதால் அளவோடு உணவு சாப்பிட்டால் போதுமானது. வேலை செய்பவர்களாக இருந்தால் இரவில் புரோட்டா போன்ற கடினமான உணவுகளை உண்ணலாம். குழந்தைகள், தூங்கச் செல்பவர்களுக்கு சப்பாத்தி, இட்லி போன்ற உணவுகளே போதுமானது.


Sunday, 7 September 2014

மின்சாரத்தை சேமிப்பதர்க்கான வழிகள்



தேவையே இல்லாத நேரத்திலும் வீட்டில் ஃபேன் சுற்றும், லைட் எரியும். இதை நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் மிச்சம் பிடித்து என்ன கோட்டையா கட்டப் போகிறோம் என மெத்தனமாகக் கேட்கிறோம்.

ஆனால் மின்னாற்றலைச் சேமிப்பது நமக்கு மட்டுமல்ல நமது நாட்டுக்கே நல்லது. தமிழகம் மின் பற்றாக்குறையைச் சமாளிக்க திணறும் நேரத்தில் நாம் சேமிக்கும் சிறு துளி மின்சாரமும் பெரிய வெளிச்சத்தைத் தரும்.
நாட்டின் எரிபொருள் சேமிப்பில் 15 சதவீதத்தைக் குடியிருப்புப் பகுதிகளில் மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம். ஏசி, ப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், லைட், ஃபேன், வாட்டர் பம்பு ஆகியவற்றைச் சிக்கனமாகப் பயன்படுத்தி இதைச் சாத்தியப்படுத்த முடியும்.
மின்சாரத்தைச் சேமிப்பதன் மூலம் காற்று மாசைக் குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். ஏனெனில் இரண்டு சாதாரணமான கார் வெளியேற்றுவதைவிட அதிகமாக ஒரு வீட்டின் மின்சாரப் பயன்பாட்டால் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேறும்.

பொதுவாக ஒரு வீட்டின் மொத்த மின் பயன்பாட்டில் 12 சதவீதம் ப்ரிட்ஜுக்கும், 20 சதவீதம் ஏசிக்கும், 8 சதவீதம் விளக்குகளுக்கும், 32 சதவீதம் கீசருக்கும், 28 சதவீதம் பிறவற்றுக்கும் செலவாகிறது. வீட்டில் மின்சாரம் பலவகைகளில் அனாவசியமாகச் செலவாகிறது.
ஏசி பொருத்தப்பட்டுள்ள அறையை முறையாக மூடிவைக்க வேண்டும், அதில் இடைவெளி இருந்தால் அதிக மின்சாரம் செலவாகும் ஆகவே இதைத் தவிர்க்க வேண்டும். சுவிட்சுகளும், நாம் பயன்படுத்தும் முறையும் கூட மின் ஆற்றலை வீணாக்கும் வகையில் அமைந்துவிடும் எனவே இவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
வீட்டின் மின் பயன்பாட்டில் 20 சதவீதம் ஏசிக்கு ஆவதால் ஏசியின் பயன்பாட்டை முறைப்படுத்துதல் நல்லது. பசுமையான வெப்பநிலையைத் தரும் வகையில் ஏசி இயங்க வழிசெய்ய வேண்டும். வெப்பநிலையைக் கூட்டும் பொருள்களையோ சாதனங்களையோ ஏசி அறையில் வைக்கக் கூடாது.

ஏசியின் அவுட்டோர் யூனிட்டை மரத்தடி போன்ற நிழலான இடத்தில் வைத்தால் 10 சதவீதம் அளவில் மின் ஆற்றலைச் சேமிக்க அது உதவும். வீட்டைக் கிழக்கு மேற்காக அமைப்பதன் மூலமும் வீட்டைச் சுற்றி மரங்களை வளர்ப்பதன் மூலமும், பசுமைக் கூரை அமைப்பதன் மூலமும், மென்மையான, ஒளிரும் நிற பெயிண்ட்டை வீட்டின் வெளிச் சுவர்களில் பூசுவதன் மூலமும் மின் ஆற்றலைச் சேமிக்கலாம்.
அடுத்து விளக்குகள் பயன்பாடு 8 சதவீத மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. எனவே தேவையில்லாத சமயங்களில் மின் விளக்குகளை ஒளிர விடுதலைத் தவிர்க்க வேண்டும். குண்டு பல்புகள் எனச் சொல்லப்படும் டங்க்ஸ்டன் பல்புகளைத் தவிர்த்து சிஎஃப்எல் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். வீட்டின் புறத்தில் இரவுகளில் மட்டும் விளக்குகளை ஒளிரவிட வேண்டும். வெளிச்சம் தேவைப்படாதபோது அவற்றை அணைத்துவிடுதல் நல்லது.
பிரிட்ஜ்களின் பயன்பாட்டுக்கு 12 சதவீத மின் ஆற்றல் செலவாகிறது. எனவே ப்ரிட்ஜையும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். அளவுக்கதிகமான குளிர் நிலவும்படி ஃப்ரீஸர்களை வைத்திருத்தல் நல்லதல்ல. கூடுமானவரையில் ப்ரிட்ஜை அடிக்கடி மூடித்திறப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். நொடிக்கொரு முறை ப்ரிட்ஜை மூடித் திறந்தால் மின் ஆற்றல் வீணாகும்.

ப்ரிட்ஜுக்கும் சுவருக்கும் இடையே போதிய இடைவெளி இருப்பது அவசியம். இதனால் ப்ரிட்ஜின் மின்சாரத் தேவை குறைய வாய்ப்புள்ளது. உணவுப் பதார்த்தங்களை 36-40 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையிலும், ஃப்ரீஸரை 0-5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையிலும் வைத்துப் பராமரிப்பது நல்லது. ப்ரிட்ஜின் கதவு நன்கு இறுக்கமாக மூடி இருக்க வேண்டும். அதில் இடைவெளி இல்லாமல் இருப்பது அவசியம்.

வாஷிங் மெஷினைப் பொறுத்தவரை எப்போதும் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது அதன் மேக்ஸிமம் லோடு அளவுக்கு துணிகள் இடம்பெற வேண்டும். டிடர்ஜெண்ட் பவுடர் தேவையான அளவு போட வேண்டும். மிக அழுக்கான துணிகளுக்கு மட்டுமே சுடுநீரைப் பயன்படுத்த வேண்டும்.

மின்சார அடுப்பில், தட்டையான அடிப்பாகம் கொண்ட பாத்திரங்களை உபயோகிக்க வேண்டும். மின் சாதனங்களை முறையாகக் கையாண்டால் மின் ஆற்றலை சரியான விதத்தில் சிக்கனமாகச் செலவழித்து மின் ஆற்றல் சேமிப்புக்கு நம்மால் ஆன அளவில் உதவ முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.