Thursday, 10 July 2014

ஆண்கள், பெண்களுக்கு தலை வழுக்கை – மீண்டும் முடி வளர என்ன செய்யலாம்?




நம் உடம்பில் ஐந்து மில்லியன் முடிகள் உள்ளன. தலையில் மட்டும் எண்பதாயிரம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் முடிகள் உள்ளன. புரோட்டின் சத்தில் உள்ள கேரட்டின் என்கிற மூலப்பொருள்தான் முடிகள் வளர்வதற்குக் காரணமாக இருக்கிறது. புரோட்டின் சத்து குறைந்தால், முடி அதிகமாக உதிரும். நம் உடம்பில் எத்தனை முடி இருக்கிறதோ, அவற்றுக்கான அடித்தண்டு (follicies), தாயின் வயிற்றில் இருக்கிற போதே தோன்றி விடுகிறது. பிறப்பிற்குப்பின் புதிய முடி வளர்வதற்கான அடித்தண்டு எதுவும் தோன்றுவதில்லை.
வழுக்கை பரம்பரையாக ஏற்படுவது என்பது தவறான கருத்து. இதற்கு ஐம்பது சதவிகித வாய்ப்புகளே உண்டு. தலையில் ஏற்படும் பொடுகினாலும் தலைமுடி பலமிழந்து போகலாம்.


மனஉளைச்சல் காரணமாகவும் தலைமுடி சரமாரியாக விழலாம். மஞ்சள் காமாலை, மலேரியா, டைபாயிட் போன்ற நோய்கள் வந்தாலும் தலைமுடி உதிரும்.
சிகரெட் பிடிப்பதும், தலைமுடி உதிர்வதற்கு ஒரு முக்கியமான காரணம். கைகால் வலிப்பு நோய்க்கான மருந்துகளைச் சாப்பிடும்போது, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான மாத்திரைகளைச் சாப்பிடும்போது, சில வகையான நோய் எதிர்ப்புச் சக்தி தரும் மாத்திரைகளை சாப்பிடும்போதும் தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்.
பெண்களின் உடம்பில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால்தான் தலைமுடி நிறைய கொட்டும் வாய்ப்பு உண்டு. பெண்கள் பூப்படைந்தவுடன், அதாவது 12 முதல் 14 வயதுக்குள் நிறைய தலைமுடி இழக்கலாம்.
பிரசவம் முடிந்த சில மாதங்களுக்குள் நிறைய தலைமுடி கொட்டலாம். நாற்பத்தைந்து வயதில் மாதவிடாய் நிற்கிறபோதும் தலைமுடி உதிரலாம்.
ஊட்டச்சத்து குறைவாக இருக்கும்போது, முடி உதிர்கிறது. உதாரணமாக, நம் ரத்தத்தில் இரும்புச் சத்து குறைந்தால், முடி அதிக அளவில் உதிரும். பெண்களுக்கு ஹேமோகுளோபின் எண்ணிக்கை பன்னிரண்டோ அல்லது அதற்கு அதிகமாகவோ இருக்க வேண்டும்.

தலைமுடி மீண்டும் வளர



* வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* இளநரை கருப்பாக நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

* முடி கருப்பாக ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

* தலை முடி கருமை மினுமினுப்பு பெற அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

* செம்பட்டை முடி நிறம் மாற மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

* நரை போக்க தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

* முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

* முடி வளர்வதற்கு கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* சொட்டையான இடத்தில் முடி வளர நேர்வாளங்கொட்டையை உடைத்து பருப்பை எடுத்து நீர் விட்டு மைய அரைத்து சொட்டை உள்ள இடத்தில் தடவிவர முடிவளரும்.

* புழுவெட்டு மறைய நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Monday, 7 July 2014

கட்டாயம் உள்ளெடுக்க வேண்டிய காலை உணவின் முக்கியத்துவங்கள்




       அம்முக்குட்டி… தங்கக்குட்டி…’ எனக் குரலால் மனம் வருடி, காது மடல்கள், புருவம், கன்னங்களில் தடவிக் கொடுத்து, ஒரு பூவை காற்றும் வெயிலும் மலர்த்துவது போல குழந்தையைத் துயில் எழுப்பினால் அந்தக் காலை எப்படி இருக்கும்? நினைக்கவே இனிக்கிறதில்லையா? ‘மணி ஏழரை ஆச்சு… எந்திரி…’ என அம்மா எழுப்ப… ‘இன்னும் அஞ்சு நிமிஷம்… ப்ளீஸ்மா’ என்று செல்லம் கெஞ்ச… அம்மாவுக்கு டென்ஷன் எகிறும். ஒருவழியாக குழந்தையைக் குளிக்க வைத்து, யூனிஃபார்ம் அணிவித்து, சாப்பிட வைத்து, ஆட்டோவில் அடைத்து அனுப்பிய பிறகு பார்த்தால், வீடு போர்க்களமாகக் காட்சியளிக்கும். இந்தப் பரபரப்பில் 95 சதவிகிதக் குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை.
சத்தான காலை உணவே குழந்தைகளின் நினைவுத்திறன், எச்சரிக்கை உணர்வு, ஒருமுகத்தன்மை, பிரச்னைகளைத் தீர்க்கும் திறன், மகிழ்ச்சியான மனநிலைக்கு வழிவகுக்கும்.


காலை உணவை தவிர்ப்பதால் வயிற்றில் அமிலம் சுரந்து, புண் ஆகி, நாளடைவில் அல்சர் பிரச்னையாக மாறும். உடல் வளர்ச்சியையும் பாதிக்கும். மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் குளுக்கோஸ் குறைந்து சோர்வை ஏற்படுத்தும்.
சில வீடுகளில் எழுந்தவுடன் பால் கொடுப்பதால் செரிமானம் ஆகாமல் குழந்தைகள் மந்தமாகக் காணப்படுவார்கள். தொடர்ச்சியாக பால் குடிப்பது மட்டுமே உடல்நலத்தை மேம்படுத்தாது.


காலை உணவு சாப்பிடாமல் நொறுக்குத்தீனியை உள்ளே தள்ளிக்கொண்டே இருந்தால் பசியும் தீராது… உடலுக்கும் நன்மை இல்லை. எடையும் அதிகரிக்கும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகும் உணவைத் தவிர்ப்பதால், உடல் அதிக சக்தியை செலவளிக்கிறது. இது சோர்வை அதிகரிக்கும். உடல் பலவீனத்தால் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். காய்ச்சல், சளி மற்றும் வைரஸ் தொற்றுகளின் பாதிப்பு அதிகமாகும். உடல்நலம் பாதிக்கப்படுவதால் இயல்பான வளர்ச்சியும் படிப்பும் பாதிக்கப்படும். 


இக்குழந்தைகள் கோபம், எரிச்சலுடன் காணப்படுவார்கள். எதிலும் நாட்டம் இல்லாமல் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டு வெறித்தனமான செயல்களில் ஈடுபடும் அபாயமும் உண்டு.
காலை உணவு முறையாக இருந்தால்தான் ரத்த சர்க்கரை அளவு சரியாக இருக்கும். மூளை, இதயம், செரிமான மண்டலம் மற்றும் எலும்பு, தசைகளும் ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்துள்ள காய்கறிகள், பருப்பு வகைகளை எடுத்துக்கொண்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். கொழுப்பு நிறைந்த காலை உணவு மந்த நிலையை உருவாக்கும். மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், வைட்டமின் மற்றும் மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் என சமச்சீர் காலை உணவு அவசியம்.
பட்டினி கிடக்கும் பச்சைக் குழந்தைகள்
தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவைத் தவிர்ப்பதற்கு நேரமின்மையைக் காரணம் காட்டுகிறார்கள்… ‘வாரத்தில் 3 – 5 நாட்கள் வரை காலை உணவை 22 சதவிகிதக் குழந்தைகள் தவிர்க்கிறார்கள். 20 சதவிகிதக் குழந்தைகள் வாரத்தில் ஓரிரு நாட்கள் தவிர்க்கிறார்கள். 58 சதவிகிதக் குழந்தைகள்தான் தினமும் சாப்பிடுகிறார்கள். அதுவும் சரிவிகித சத்துள்ளதா என்பது கேள்விக்குறி’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளாக இருந்தால் முதல் நாள் இரவே, அடுத்த நாள் சமையலை அவர்களுடன் சேர்ந்தே திட்டமிடுங்கள். கடைக்கு அழைத்துச் சென்று அவர்களையே காய்கறியைத் தேர்வு செய்யச் சொல்லுங்கள். ஒவ்வொரு காயிலும் என்ன சத்து இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். காய்கறி குறித்து குழந்தை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் தயாராக இருங்கள். இந்த அனுபவங்கள் உணவைப் பற்றி கற்பனை செய்யவும், அதை சாப்பிடும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.


”குளித்தல் உள்ளிட்ட அன்றாடக் கடமைகளைச் செய்து முடித்து, குழந்தைக்குப் பசித்த பிறகு உணவு தரலாம். வழக்கமான இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுக்குப் பதிலாக, குழந்தைக்குப் பிடித்த உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். பாலுடன் கார்ன் ஃபிளேக்ஸ், அரை வாழைப்பழம் சேர்த்துக் கொடுக்கலாம். இதில் புரோட்டீன், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. ஓட்ஸ் காய்கறி கலவை அல்லது தேன் கலந்த ஓட்ஸ், அரை ஆப்பிள் கொடுக்கலாம். ரவையுடன் முந்திரி, பாதாம், உலர்திராட்சை சேர்த்த கேசரி அல்லது பிரெட் சாண்ட்விச் அல்லது வெண்ணெய் தடவிய பிரெட் கொடுக்கலாம். இட்லிக்கு நிலக்கடலை சட்னி, காய்கறிகள் சேர்த்த உப்புமா, வேக வைத்த முட்டை, பன்னீர் டோக்ளா என எளிய உணவுகளை வித்தியாசமாகச் செய்யலாம். காலை உணவோடு ஒரு பழம் நல்லது!”


சமைக்கும்போது சின்னச் சின்ன வேலைகள் செய்ய குழந்தைகளை அனுமதியுங்கள். தனது பங்களிப்பை செலுத்தும் போது, அது தான் சமைத்த உணவு என்ற எண்ணத்துடன் ரசித்து ருசித்து சாப்பிடப் பழகும் குழந்தை. பள்ளிக்கான தயாரிப்புகளை இரவே முடித்து விடுங்கள். தொலைக்காட்சி நேரத்தைக் குறைத்து, வேறு விளையாட்டுகளை அறிமுகம் செய்யுங்கள். குழந்தைகளின் வேலையை அவர்களே செய்ய வாய்ப்பளியுங்கள். காலை நேர டென்ஷனை தவிர்க்க இது உதவும். சாப்பிடும்போது பெற்றோரும் இணைந்துகொண்டால் போட்டி போட்டு சாப்பிட்டு சுவாரஸ்யத்தை ஏற்படுத்தலாம். பெற்றோரும் சரிவிகித சத்துணவுக்கு மாறுவதே நல்லது. பசித்த வயிறும் அழுத கண்களுமாகச் செல்லங்களை பள்ளிக்கு வழியனுப்பும் நிலை மாறட்டும். தலைவாரி பூச்சூட்டி சத்தாக சாப்பிட வைத்து இன்முகத்துடன் வழியனுப்புவோம். முத்தங்களை பரிசாகப் பெறுவோம்!